கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, May 31, 2016

விதியே வலியது

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்…!

ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான். :

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”

மனிதன் :ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை .

எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது .

மனிதன்: 
சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் .

” எமதர்மன் :
சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்.

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ….

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான்
“நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான்

“!!! கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ……. நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட …

படித்ததில் பிடித்தது

மனத் திருப்தியே மகத்தானது

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் .

அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர் சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்.

உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார் .

சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார் .

பணக்காரர் ஆச்சரியத்துடன்

என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே  எனக்கேட்டார் .

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி.

“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர் .

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.

பணக்காரர் வியப்புடன்

” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்.

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி.

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்

படித்ததில் பிடித்தது

கோபம் கொடிய விஷம்

ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். ”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார் அப்பா.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான். 

படித்ததில் பிடித்தது

அப்துல் கலாம் மாணவ மாணவியரக்கு கூறிய உறுதி மொழிகள்

பள்ளி மாணவ-மாணவியர் ஏற்க வேண்டிய 10 உறுதிமொழிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தினார்.

1) நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.

2) நன்றாக உழைத்து படித்து, வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முயல்வேன்.

3) எனது விடுமுறை நாள்களில், எழுதப் படிக்கத் தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன்.

4) எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன்.

5) மது, சூதாடுதல், போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த முயல்வேன்.

6) துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன்.

7) ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன்.

8) வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

9) என் தாய், தாய்நாட்டை நேசித்து, பெண் குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன்.

10) நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!உலகம் உன்னை அறிவதைவிட, உன்னைஉலகிற்கு அறிமுகம் செய்துகொள். நீ முடியாது என்று சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.

பள்ளிகள் நாளை திறப்பு,பெற்றோர் கொண்டாட்டம்,மாணவர்கள் திண்டாட்டம்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.கோடை வெயில் வறுத்தெடுத்ததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என, கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர்.
இதனால், பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கல்வி துறை மறுத்து விட்டது.இதனால், திட்டமிட்டபடி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்,நாளை திறக்கப்படுகின்றன.
இலவச புத்தகம் ,சீருடை
அன்றைய தினமே, இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பல மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஜூன் 6; சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜூன் 8ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.
தள்ளிவைக்க கோரிக்கை
இதற்கிடையில், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சங்க பொதுச் செயலர் சேகர் தலைமையில், நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள், ஜூன் 1ல் பள்ளிக்கு வருவது சிரமமாக இருக்கும். எனவே, ஜூன், 10ம் தேதி வரை, பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும்.
அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், நேரடியாக, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த நியமிக்கப்பட்ட, பட்டதாரி ஆசிரியர்கள், எம்.பில்., பட்டம் பெற்றிருந்தால், ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
அதை வழங்க, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Monday, May 30, 2016

sitemap

மாணவர்கள் பைக் , செல்லுடன் பள்ளி வர தடை

பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம்!:

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

16 முதல் 18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில்,பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது. மீறி வந்தால் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின் வாகனத்தின் சாவியை ஒப்படைக்கவேண்டும்.

பள்ளிக்கு மாணவர்கள் செல்லிடப்பேசியை எடுத்துவர அனுமதிக்கக் கூடாது. மீறி எடுத்துவரும் மாணவரின் செல்லிடப்பேசியை பறிமுதல் செய்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும். வாகனங்களின் மேற்கூரையிலும், படிக்கட்டிலும் பயணம் செய்யக் கூடாது என்பதை எடுத்துரைத்தல் வேண்டும்.

சாலையில் செல்லும்போதும், சாலையைக் கடக்கும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்கூடாது. சாலை பிரிப்பானை குறுக்கே தாண்டிச் செல்லக்கூடாது. பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.

போக்குவரத்துக் காவலர்களின் சமிக்ஞைகளுக்கு கட்டுப்பட்டு, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப் பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். படிக்கட்டு பயணம் செய்யும் மாணவரை அடையாளம் கண்டு, அவருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து உரிய அறிவுரை வழங்கிட வேண்டும்.

இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் கட்டணமில்லாப் பேருந்துப் பயண அட்டை திரும்பப் பெறப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல் வேண்டும்.

காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.

Sunday, May 29, 2016

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடை

செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை

வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கை:

பள்ளி சூழலானது மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் இடங்களாக இருக்க வேண்டும். தூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டத்துடன் கூடிய சுத்தமான வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமிக்க கழிவறைகள் உள்ளிட்டவற்றை பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் மற்றும் ஆசிரியர்கள் துணையுடன் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அடுத்துள்ள பள்ளிகளில் ஐந்து, எட்டு மற்றும் 10ம் வகுப்பு படித்த மாணவர்களை தம் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளின் உயர்வை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இங்குள்ள வசதிகளான ஆங்கில வழி கல்வி, முற்றிலும் இலவசமான கல்வி, மனம் அழுத்தம் இல்லாத கல்வி முறை, அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட அம்சங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகம் செய்வதுடன் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் இணைந்து தலைமை ஆசிரியர் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கி அன்றே கால அட்டவணை தயாரித்து அளித்து கற்பித்தல் பணியை ஆசிரியர்கள் தொடங்க வேண்டும்.

ஆசிரியர்கள் தினமும் பள்ளி தொடங்கும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து தங்கள் வகுப்பறையின் உள் சுத்தம், வெளிசுத்தம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு இது தொடர்பாக தக்க அறிவுரை வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் இல்லாத நிலை வகுப்புகளில் இருக்க கூடாது.

ஆசிரியர்கள் பணி நேரத்தில் வகுப்பறைகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. வெளியே செல்ல நேர்ந்தால் உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் எந்த காரணம் கொண்டும் செல்போன்களை பயன்படுத்த கூடாது.

செல்போன் பயன்படுத்தினால் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜுன் 1 மீண்டும் பள்ளி திறப்பு

பள்ளிகள் வழக்கம் போல் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குனர் தகவல்

பள்ளிகள் வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

கோடை விடுமுறை 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 55 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஏப்ரல் மாதம் இறுதிவரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

விடுமுறைக்கு பின்னர்
ஜூன் 1-ந் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் சுட்டெரித்த அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தது. தென்மாவட்டங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவந்தாலும், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

எனவே தொடர்ந்து கொளுத்தும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பதை மேலும் சில நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1-ந் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள், வெயில் காரணமாக ஜூன் 6-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? என்று பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,

தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினர்.

ஜூன் 1-ந்தேதி பள்ளி திறப்புஇதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில், ஜூன் 1-ந் தேதி அன்று பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், விலையில்லா சீருடைகள் மற்றும் இதர மாணவர்கள் நலத்திட்ட பொருட்களும் வழங்குவதற்கு தேவையான ஆயத்தப்பணிகளும், தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

தூய்மையாக வைத்திருங்கள்

பள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு தூய்மை மற்றும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பள்ளி வளாகம், குறிப்பாக வகுப்பறைகளை சுத்தம் செய்திட வேண்டும். வகுப்பறைகளிலும், வகுப்பறை சுற்றிலும் ‘பிளீச்சிங்’ பவுடர் தூவி தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை மேற்பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்கி கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, May 28, 2016

உணவு உண்ணும் முறைகள்

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்:

* அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

* பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். அரை வயிறு உணவு தான் உட்கொள்ள வேண்டும்..

*மீதம் கால் வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும்.

* கால் வயிறு காலியாக இருக்க வேண்டும்..

* மீதம் இருக்கும் கால் வயிறு இடம், ஜீரணம் நடக்க உதவும்.

* உணவு உட்கொண்டவுடன் நீரருந்த கூடாது.

* உணவு உட்கொண்டு சிறிது நேரத்திற்குப்பின் தானே தாகமெடுக்கும் உணர்வு வரும். அப்பொழுது நீரருந்தலாம்.

நீண்ட நாள் வாழ்க்கைக்கு நித்தம் கடைப் பிடியுங்கள்

Thursday, May 26, 2016

வெற்றி உன் கையில்

விடியாத பொழுதும் இல்லை
முடியாத செயலும் இல்லை.

நம்பிக்கை உடையவனுக்கு
தோல்வி ஓர் தொடக்கம்
நம்பிக்கை இல்லாதவனுக்கு
தோல்வி ஓர் முடக்கம்.

விழுந்தால் தான் எழ முடியும்
தோற்றால் தான் வெல்ல முடியும்.

வெற்றி வந்தால் பெற்றுக்கொள்
தோல்வி வந்தால் கற்றுக் கொள்.

தோல்வியே  வெற்றிக்கு முதல் படி
துவளாமல் அதை நீ பிடி.

இன்றைய தோல்வி
நாளைய வெற்றி.

முயற்சி இருக்கும் வரைதான்
முன்னேற்றமும் உனக்குள் இருக்கும்.

வாழ்க்கையெனும் கடலில்
தோல்வியெனும் அலைகள் துரத்திக் கொண்டுதான் இருக்கும்.

நாம் வெற்றியெனும் கரையை கடக்க
தோல்வியெனும் அலையை
முயற்சியெனும் ஆயுத்தால் தான் வெல்ல முடியும்.

கடந்த காலத்தில் கற்றதை வைத்து
நிகழ்காலத்தில் நித்தம் உழைத்தால்
எதிர்காலத்தை இனிமையாக மாற்ற முடியும்.

முடியும் என எண்ணிணாலே
பாதி முடிந்தது போல்.

முயற்சி செய்,முக்காலமும் பயிற்சி செய்.

வெற்றி. வெற்றி. வெற்றி.

கரடி கற்று தந்த பாடம்

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.

அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

புலி கரடியிடம் கூறிற்று:
இவ்வேடன் நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு!

கரடி:
இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று:

எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் .கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது.

இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.

Wednesday, May 25, 2016

மருத்துவ படிப்பு விண்ணப்பம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விதிவிலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின்படி, தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் வரும் மருத்துவ இடங்களுக்கு மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத தேவையில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் வழக்கமான கலந்தாய்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இது குறித்து சென்னையில், இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, "மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு கலந்தாய்வு முறைப்படி நடைபெறும்.

மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு குறித்து குழப்பமடைய வேண்டாம். மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரில் பெறலாம். ஜூன் 6 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7 மாலை 5 மணி வரை அளிக்கலாம். ஆன்லைனில் இன்று முதலே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ல் நடைபெறுகிறது. மாணவர்கள் தர வரிசைப் பட்டியல் ஜூலை 17-ல் வெளியிடப்படுகிறது" என்றார்.

பத்தாம் வகுப்பு ஈரோடு முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு:

499 மதிப்பெண்கள் பெற்று பிரேமசுதா, சிவக்குமார் முதலிடம் -

50 பேர் இரண்டாமிடத்தை பெற்றனர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியருக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் மற்றும் 48,573 தனித்தேர்வர்கள் எழுதியிருந்தனர்,

இன்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட, கோகுல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.வி.எக்ஸெல் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிரேமசுதா ஆகியோர் 499 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

மேலும், 498 மதிப்பெண்கள் பெற்று 50 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும்,

497 மதிப்பெண்கள் எடுத்து 214 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.3%, மாணவியர்கள்  தேர்ச்சி விகிதம் 95.9% ஆகவும் உள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களைவிட, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமே  அதிகமாக உள்ளது.

எனினும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.7 % மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது சற்று ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது.

அறிவியலில் 18,462 பேரும், சமூக அறிவியலில் 39,398 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், கணிதத்தில் 18,754 பேரும், ஆங்கிலத்தில் 51 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஈரோடு முதலிடம்

98.48% மாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்ற பெருமையுடன் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.