பிளஸ்-2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் இன்னும் அறிவிக்கப்படாததால் தேர்வெழுதிய மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்வு முடிவு தேதியை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண் தொகுப்பு பணி உள்ளிட்ட அனைத்துப் பணி களும் முடிவடைந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவு நாள் வெளியிடப்படாததால் தேர்வெழுதிய மாணவர்களும், பெற்றோர் களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு புதிதாக மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலை அறிவியல் கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மதிப்பெண் தெரிந்தால்தான், மாணவர்களால் விண்ணப்பங்களை கல்லூரிகளில் சமர்ப்பிக்க முடியும்.
தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பை தேர்வுத்துறை இதுவரை வெளியிடாததால் ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர்தான் தேர்வு முடிவு வெளியிடப்படுமோ என்றும் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:-
மாணவர்கள், பெற்றோர்களை குழப்புகிறது: பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ம் தேதியே முடிவடைந்துவிட்டது. குறிப்பிட்ட தேதியில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தேர்வு முடிவு தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாததால் தேர் வெழுதிய மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர். தேர்வு முடிவு தேதி தெரியாத காரணத்தினால் கோடை விடுமுறையில் வெளியூர்களுக்குச் செல்வது, உறவினர் வீடுகளுக்குப் போவது, சுற்றுலா செல்வது உள்ளிட்ட விஷயங்களை முடிவுசெய்ய இயலாமல் பெற்றோர் தவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக முன்கூட் டியே வெளியிடப்பட்டன. எனவே, இம்முறையும் பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர் வமாக உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment