கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, November 30, 2016

நாடா புயல் எச்சரிக்கைகள்

''நாடா'' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

'நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

15 அறிவுறுத்தல்கள்

1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.

3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.

4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.

6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.

8. நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.

9. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.

10. மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11. மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12. அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.

13. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14. மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.

15. பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.

இவ்வாறு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

VISIT :  http://tamil.thehindu.com

ஐந்து மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

நாடா புயல் எச்சரிக்கை... தமிழகத்தின் 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2ல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் மற்றும் வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 29, 2016

தெரியாத தொழில் கிடைத்த லாபம்

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன். எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்? என்று கத்தினார்.

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும், என்றான்.

முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே, என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான். கேசவனை பார்த்தக் கொல்லன், உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும், என்றான்.

என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா? என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள், என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, சரி என்றார். சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள், என்றான் அவன்.

நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன் என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன.

கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர். கொல்லனைப் பார்த்து, இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன், என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், இனி நான் இங்கு வரமாட்டேன், என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர், என்றார்.

ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே, என்றான் அவன். நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும்.வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்? என்றார் அவர்.

ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான் என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும், என்றான் அவன். அந்த இரும்புத் துண்டைத் தூக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார். நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும், என்றார். பிறகு அந்த இரும்பைத் தூக்கி உலைக்களத்தில் போட்டார்.

சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது. உதவியாளைப் பார்த்து, ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும், என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார். களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான்.

ஐயா! என்னால் முடியவில்லை, என்றான். உழவனைப் பார்த்து அவர், இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய், என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான். நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது.

அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கிய அவர், என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.

சரி கோடரியே செய்து தாருங்கள், என்றான் அவன். மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார். மிகவும் சிறியதாக இருந்தது அது. இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.

ஏதாவது செய்யுங்கள், என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், எதையாவது செய்து தாருங்கள், என்றான். அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது, என்று அதை உழவனிடம் தந்தார்.

நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும், என்றார். ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார், என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன், என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன், என்றார். உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர்.

வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான். வண்டியோட்டியைப் பார்த்து, நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் போதுமா என்று கேட்பான்.

நீ உடனே, போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு, என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர். அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும், என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள், என்று உரத்த குரலில் கத்தினான்.

கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள், என்றான் உழவன்.

எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர். உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.

வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார். அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?

டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம், என்று அலறினார் செல்வந்தர்.

Monday, November 28, 2016

யார் மகாபாவி ?

ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள். இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது.

விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர். பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான். அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான்.

சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான். மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது.

ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

இளைஞனின் தந்திரம்

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது.

அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் ,

மன்னா! இதற்கு மருந்தே கிடையாது என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான்.

ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர்.

வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை. அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம் என்று கூறினான். வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள்.

அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும் என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன் என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது! என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான்.

மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள். அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான்.

அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. குரங்கை நினைக்கக் கூடாது என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான்.

என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை. மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை.

சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

இது என் கிணறு

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!! என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.

பின்னர் கிணற்றை விற்றவனிடம் நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு.

உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.