கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, April 22, 2018

வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க மீண்டும் உத்தரவு

வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

வங்கி கணக்குகளுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கே.ஒய்.சி. எனப்படும் "உங்களின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' எனும் நடைமுறைகளின்படி, வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்ப்பது வழக்கமாகும். இதன்படி, கே.ஒய்.சி. சரி பார்ப்புக்கு முகவரி ஆவணமும், வருமான வரித்துறையால் அளிக்கப்பட்டுள்ள நிரந்தர கணக்கு (பான்) எண்ணும், அண்மையில் எடுக்கப்பட்ட கையளவு புகைப்படமும் வங்கிகள் பெற்று வருகின்றன.

இந்நிலையில், அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை இரவு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேசிய அளவில் வாடிக்கையாளர் அடையாள சரி பார்ப்பு திருத்தப்பட்ட விதியின்கீழ், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண், பான் எண் அல்லது பார்ம் எண் 60ஐ இணைக்க வேண்டும். இருப்பினும், ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்படும் இறுதி தீர்ப்புக்கு இந்த உத்தரவு பொருந்தும். அதேநேரத்தில், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், மேகாலய மாநிலங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள், வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைக்க வேண்டியதில்லை. அவர்களிடம் இருந்து முகவரி, அடையாளச் சான்று தொடர்பான ஏதேனும் ஆவணம், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வங்கிகள் பெறலாம்.
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்திய பிரஜை அல்லாத மக்களிடம் இருந்து, ஆதாருக்குப் பதிலாக நிரந்தர கணக்கு எண், கையளவு புகைப்படம், அட்டவணையில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் கூடிய சான்று ஆகியவற்றை பெற வேண்டும்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்ட விதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவின் அடிப்படையிலேயே புதிய கே.ஒய்.சி. விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைக்க விதிக்கப்பட்ட இறுதி காலக்கெடுவை மத்திய அரசு தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் நீட்டித்தது. ஆதார் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வெளியிட்டதும், காலக்கெடு தேதி வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஆதார் சட்டத்தில், இந்தியாவில் 180 நாள்களுக்கும் மேல் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும், ஆதார் எண் கோரி விண்ணப்பிக்க தகுதி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment