சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் மாற்று திறனாளிகளுக்கு புதிய ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்
புதிய வண்ண அட்டை
மாற்று திறனாளிகளுக்கு புதிய வண்ணத்திலான ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் நலத் திட்டங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும் நேரடி வங்கி கணக்கு மானியங்களையும், சமூக நலத்திட்டங்களையும் ஆதாருடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மாற்று திறனாளிகள் எளிதாகவும், விரைவிலும் சமூக நல திட்டங்களை பெறும் வகையில் அவர்களுக்கு என தனியாக வண்ண ஆதார் அட்டைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளை மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. மாற்று திறனாளிகளின் உடல் திறனை பொறுத்து இந்த அட்டைகள் சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற வண்ணங்களில் அளிக்கப்படும்.
இதற்கான முதல் ஆதார் அட்டைகள் வருகிற ஆகஸ்ட் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள ரதியம் என்ற இடத்தில் வழங்கப்பட உள்ளது. இங்கு சோதனை முயற்சியாக இந்த திட்டம் பரிசோதிக்கப்பட உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு மாற்று திறனாளிகள் 2.68 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவில் மத்திய அரசின் வசம் அதிகாரப்பூர்வமாக மாற்று திறனாளிகள் குறித்த தகவல்கள் எதுவும் கிடையாது.
தற்போது ஆதார் மூலமாக துல்லியமான எண்ணிக்கையை பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலமாக மாற்று திறனாளிகளுக்கான சமூக நலத்திட்டங்கள் உடனடியாகவும், விரைவாகவும், எளிதாகவும் அவர்களுக்கு சென்று சேர வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment