கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, June 5, 2016

கோவை புதிய எம்.பி.பி.எஸ் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை

கோவையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை

கோவையில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிகழ் கல்வி ஆண்டிலேயே (2016-17) செயல்பட உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்சிஐ) பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான முதல் கட்ட ஒப்புதலை மத்திய சுகாதாரத் துறை அளித்துள்ளது.

21-ஆவது அரசு மருத்துவக் கல்லூரி:

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

கோவையில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த இ.எஸ்.ஐ. (தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனம்) மருத்துவக் கல்லூரியை முழுவதும் தமிழக அரசே ஏற்று நடத்த உள்ளதால், 21-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாக நிகழ் கல்வி ஆண்டு முதல் செயல்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கோவையில் 2-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாகவும் இது செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.580 கோடியில்...: சென்னை கே.கே. நகரில் கடந்த 2013-14-ஆம் கல்வி ஆண்டு முதல் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இதே போன்று கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.580.57 கோடியில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. ஆனால், நிதிச் சுமை காரணமாக கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்த முடியாது என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்து, தமிழக அரசை ஏற்று நடத்துமாறு கூறியது.

நிபந்தனையை ஏற்ற மத்திய அரசு:

சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டையும் ரூ.571.23 கோடி அளித்துவிட்டு ஏற்று நடத்துமாறு தமிழக அரசுக்கு கடிதம் முலம் மத்திய அரசு கூறியது.

மத்திய அரசின் இந்தக் கோரிக்கையை சில நிபந்தனைகளுடன் ஏற்பதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில் அனுப்பியது. அதாவது, மொத்த முதலீட்டுத் தொகை ரூ.571.23 கோடியை மத்திய அரசே ஏற்க வேண்டும், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆகும் செலவில் 87.5 சதவீத பங்கை மத்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழக அரசு விதித்தது.

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை முதலீட்டுத் தொகை ரூ.194.81 கோடியை மத்திய அரசு ஏற்க ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிகழ் கல்வி ஆண்டிலேயே (2016-17) முழுவதும் தமிழக அரசு ஏற்று நடத்த உள்ளது.

இதற்கான ஒப்புதலும் மத்திய சுகாதாரத் துறையிடமிருந்து கிடைத்துள்ளது.

எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு

கோவையில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) முதல் செயல்பட உள்ள தமிழக அரசின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் கீழ்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்படும்.

மொத்தம் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் 65 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுடன் சேர்த்து கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்;

இஎஸ்ஐ தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு 20 எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மீதமுள்ள இடங்கள் ஒதுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிப்பு:

கோவை அரசு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மூலம் நிகழ் கல்வி ஆண்டில் கூடுதலாக 65 இடங்கள் கிடைப்பதால், மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 2,313-ஆக அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment