வரும் 31ம் தேதிக்குள் ‘ஸ்கேன்’ செய்ய அவகாசம் ஆதார் பதிவு செய்தால் மட்டுமே ‘ஸ்மார்ட்’ கார்டு
ஆதார் விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, ‘ஸ்மார்ட்’ ரேஷன்கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
வரும், 31க்குள் ஆதார் ‘ஸ்கேன்’ செய்து கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 1020 ரேஷன் கடைகளில், 5.06 லட்சம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில், 65 சதவீதம் கார்டுகள் ரேஷன் அரிசி பெறும் தகுதியுடையவை. மாதம், 8 ஆயிரத்து 495 டன் அரிசி வினியோகிக்கப்படுகிறது.
தவிர, 903 டன் சர்க்கரை, 178 டன் கோதுமை, 1008 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் உளுந்து, துவரம் பருப்பு, பாமாயில் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த வார நிலவரப்படி, மாவட்ட அளவில் இதுவரை, 3 லட்சம் கார்டுதாரர்கள் மட்டுமே ஆதார் விவரத்தை “ஸ்கேன்’ செய்துள்ளனர். தபால் மூலம் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை “ஸ்கேன்’ செய்வது எளிதாக உள்ளது. “ஆன்-லைன்’ மூலம் பதிவிறக்கம் செய்த அட்டைகளை “ஸ்கேன்’ செய்வதில் குளறுபடி நீடிக்கிறது.
பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள் டிசம்பர் 31ல் காலாவதியாகிறது. வரும் ஜனவரி முதல், ‘ஸ்மார்ட்’ கார்டு மூலம் பொருள் வினியோகம் நடக்க உள்ளது. வரும், டிசம்பர் மாதம், ‘ஸ்மார்ட்’ கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடக்கும் என்பதால், ஆதார் ‘ஸ்கேன்’ செய்யும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘மாவட்டத்தில், ரேஷன் பயனாளிகளில், 60 சதவீதம் பேரின் ஆதார் விவரம் ‘ஸ்கேன்’ செய்யப்பட்டுள்ளது. ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில், ரேஷன் கார்டு, ‘மொபைல்’ மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புதிய ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும்.
இம்மாத இறுதிக்குள், கார்டில் உள்ள, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீங்கலாக, அனைவரின் ஆதார் விவரத்தையும் ‘ஸ்கேன்’ செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். வரும் நவம்பர் மாதம் முதல் அனைத்து குடும்ப உறுப்பினரின் ஆதார் விவரத்தை பதிவு செய்தவர்கள் மட்டுமே, பொருட்கள் பெற முடியும். ரேஷன் கார்டில் உள்ள, அனைத்து நபர்களின் ஆதார் விவரம் பதியாமல் இருந்தால், கார்டு தானாக ரத்தாகிவிடும். குடும்ப தலைவர் அல்லது யாராவது ஒருவரின் ஆதார் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும்.
வரும் டிசம்பர் மாதத்தில், ‘ஸ்மார்ட் கார்டு’ தயாரித்து வழங்கும் பணி நடக்க உள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment