கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, March 2, 2018

திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் வரலாறு


பெயர் :திருவள்ளுவர்
இடம் : மயிலாப்பூர், தமிழ்நாடு
புத்தகங்கள் : திருக்குறள், ஞான வெட்டியான், பஞ்ச ரத்னம், இரத்தினசிந்தாமணி, வைத்திய சூத்திரம், குருநூல், நாதாந்த சாரம், நாதாந்த திறவுகோல்
வகித்த பதவி : புலவர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர்.
உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்.
சிறப்பு

இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.
பிறப்பு: திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வரலாறு: தமிழில் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்க சக வருடம் பயன்படுத்தப்பட்டாலும் அது தமிழரல்லாத சகர்களின் ஆட்சியை ஆதாரமாகக் கொண்டதால், தமிழர்களுக்கு என தனியாக தொடர்ச்சியாக கூடும்படி ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் 1921 ஆம் ஆண்டு (கிரிகோரியன் ஆண்டு) பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி முன்பு செய்த ஆய்வின் பயனாக திருவள்ளுவர் இயேசு கிறிஸ்த்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என முடிவுகட்டினர்.
திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவை கூட்டாக எடுத்த தமிழ்ப்பெரியோர்களில் மறைமலை அடிகள். தமிழ்த்தென்றல் என்றழைக்கப்பெற்ற திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் அடங்குவர். தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்பட்டு வருகின்றது.
திருவள்ளுவர் ஆண்டு:
திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2011 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது 2042 ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படும்.
நினைவுச் சின்னங்கள்: இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

No comments:

Post a Comment