பத்தாம் வகுப்பு தேர்வு:
499 மதிப்பெண்கள் பெற்று பிரேமசுதா, சிவக்குமார் முதலிடம் -
50 பேர் இரண்டாமிடத்தை பெற்றனர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியருக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் மற்றும் 48,573 தனித்தேர்வர்கள் எழுதியிருந்தனர்,
இன்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட, கோகுல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.வி.எக்ஸெல் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிரேமசுதா ஆகியோர் 499 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
மேலும், 498 மதிப்பெண்கள் பெற்று 50 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும்,
497 மதிப்பெண்கள் எடுத்து 214 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.3%, மாணவியர்கள் தேர்ச்சி விகிதம் 95.9% ஆகவும் உள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களைவிட, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது.
எனினும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.7 % மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது சற்று ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது.
அறிவியலில் 18,462 பேரும், சமூக அறிவியலில் 39,398 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், கணிதத்தில் 18,754 பேரும், ஆங்கிலத்தில் 51 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஈரோடு முதலிடம்
98.48% மாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்ற பெருமையுடன் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
No comments:
Post a Comment