பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம்!:
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
16 முதல் 18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில்,பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது. மீறி வந்தால் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின் வாகனத்தின் சாவியை ஒப்படைக்கவேண்டும்.
பள்ளிக்கு மாணவர்கள் செல்லிடப்பேசியை எடுத்துவர அனுமதிக்கக் கூடாது. மீறி எடுத்துவரும் மாணவரின் செல்லிடப்பேசியை பறிமுதல் செய்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும். வாகனங்களின் மேற்கூரையிலும், படிக்கட்டிலும் பயணம் செய்யக் கூடாது என்பதை எடுத்துரைத்தல் வேண்டும்.
சாலையில் செல்லும்போதும், சாலையைக் கடக்கும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்கூடாது. சாலை பிரிப்பானை குறுக்கே தாண்டிச் செல்லக்கூடாது. பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.
போக்குவரத்துக் காவலர்களின் சமிக்ஞைகளுக்கு கட்டுப்பட்டு, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப் பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். படிக்கட்டு பயணம் செய்யும் மாணவரை அடையாளம் கண்டு, அவருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து உரிய அறிவுரை வழங்கிட வேண்டும்.
இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் கட்டணமில்லாப் பேருந்துப் பயண அட்டை திரும்பப் பெறப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல் வேண்டும்.
காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment