4.78 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ள குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது:
4 லட்சத்து 78 ஆயிரம் பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத் துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலு வலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்துசமய அற நிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உட்பட 18 விதமான பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு சென்ற ஜூலை 26-ம் தேதி நடத் தப்பட்டது. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 266 பட்ட தாரிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவடைந்து 9 மாதங்களுக்கு மேல் ஆகியும் முடிவுகள் வெளி யிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். இந்நிலையில், குரூப்-2 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வெளியிடப்பட்டன.
ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 12,337 பேர் அனுமதிக் கப்பட்டனர். மெயின் தேர்வு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி நடை பெற உள்ளது.
தேர்வு எழுத தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.100-ஐ டிஎன்பிஎஸ்சி செயலாளர் பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுத்து ஜுன் மாதம் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.
மெயின் தேர்வில் வெற்றிபெறு வோர் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியாக, மெயின் தேர்வு மதிப் பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிநியமனம் வழங்கப்படும்.
ரேங்க், இடஒதுக்கீடு, விருப்பம் ஆகியவற்றின் பேரில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
No comments:
Post a Comment