தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படுகின்றன சென்னை, கோடை விடுமுறை முடிந்து இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இன்று பள்ளிகள் திறப்பு தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவை இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகின்றன.
பல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 6-ந்தேதி திறக்கப்படுகின்றன. சில மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிமாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கும் அன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டார்.
விலையில்லா பாடப்புத்தகங்கள் இதையொட்டி மேற்கண்ட அனைத்தும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இன்று (புதன்கிழமை) வழங்கப்படுகின்றன.
1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு என 4 கோடியே 50 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. அதில் 1-வது முதல் 9-வது வகுப்பு வரை முதல் பருவத்திற்கு என 2 கோடியே 30 லட்சம் புத்தகங்களும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய மாணவ-மாணவிகளுக்கு என 2 கோடியே 10 லட்சம் புத்தகங்களும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டன.
95 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள் இந்த பாடப்புத்தகங்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 60 லட்சம் பேர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 35 லட்சம் பேர்களுக்கும் என மொத்தம் 95 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
95 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன. பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அந்த புத்தகங்களை முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிகள் இன்று திறந்ததும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment