மொபைல் போன், கால்டாக்சி, தியேட்டர் கட்டணம் இன்று முதல் உயர்வு
வேளாண் மேம்பாட்டு திட்டத்திற்காக, 0.5 சதவீத சேவை வரி உயர்வு இன்று அமலுக்கு வருவதால், சேவை சார்ந்த அனைத்து கட்டணங்களும் சற்று உயரும்.
1 சதவீத செலவு வரியும் அமலுக்கு வருவதால், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான கார், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கினாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, 2015ல், சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து துாய்மை பாரத திட்டத்திற்காக, 14.5 சதவீதமாக உயர்த்தினார். இது, 2015 ஜூனில் அமலுக்கு வந்தது.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், கிரிஷி கல்யாண் எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிட, சேவை வரி மேலும், 0.5 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று முதல் சேவை வரி, 14.5 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்கிறது.கூடுதலாக ரூ.5 சேர்த்து.. மொபைல் போன், தரைவழி போன் கட்டணம், ஓட்டல் உணவுப் பொருட்கள், தங்கும் விடுதிக்கான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், கால்டாக்சி கட்டணம், தியேட்டர் கட்டணம், விமான டிக்கெட் என, சேவை சார்ந்த அனைத்து கட்டணங்களும், 100 ரூபாய்க்கு, 50 பைசா; 1,000 ரூபாய்க்கு, ஐந்து ரூபாய் என்றளவில் கூடும்.
ஏற்கனவே, 1,000 ரூபாய் கட்டணத்துக்கு, 145 ரூபாய் சேவை வரி செலுத்துவோர், கூடுதலாக ஐந்து ரூபாய் சேர்த்து, 150 ரூபாய் செலுத்த வேண்டும்.
விற்பனை மற்றும் சேவை சார்ந்த வகையில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கட்டினாலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கார் வாங்கினாலும்; ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் நகைகள் வாங்கினாலும், 1 சதவீத செலவு வரி விதிக்கப்படும்.இது, இன்று நடைமுறைக்கு வருகிறது. இது, 1,000 ரூபாய்க்கு, 10 ரூபாய் என்றளவில் இருக்கும். 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கினால், 10 ஆயிரம் ரூபாய் கூடும்.
ஐந்து லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால், 5,000 ரூபாய் கூடும்; இரண்டு லட்சம் ரூபாயை மொத்தமாக செலுத்தினால், 2,000 ரூபாய் கூடும்.
இதுகுறித்து, வணிக வரி ஆலோசகர் ஆர்.தியாகராஜன் கூறுகையில்,
கருப்பு பண பயன்பாட்டை தடுக்கவும், எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை இருக்கவும், மத்திய அரசு எடுத்துள்ள சிறு முயற்சி இது. ஏற்கனவே, முன் கூட்டிய வரி எனப்படும், டி.டி.எஸ்., செலுத்துவோருக்கு, 1 சதவீத வரி விதிப்புக்குள் வர வாய்ப்பில்லை, என்றார்
No comments:
Post a Comment