கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, July 27, 2017

அப்துல் கலாம் மணிமண்டபம் இன்று திறப்பு

"ராமேசுவரத்தில் இன்று அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழா

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை திறந்துவைக்கிறார்.

இதனால் ராமேசுவரம் தீவு விழாக்கோலம் பூண்டுள்ளது. அப்துல்கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பேக்கரும்பு கிராமத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள கலாமின் சமாதி முன்பாக பலரும் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் பிரார்த்தனைக் கூடம், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், கலாமின் 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் பெற்ற விருதுகள், கலாம் தொடர்பான ஓவியங்கள் ஆகியன மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.

இம்மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி தனி ராணுவ விமானத்தில் காலை 10 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்தில் உள்ள இறங்கு தளத்திற்கு காலை 11 மணிக்கு வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து காலை 11.20-க்கு கார் மூலம் கலாமின் மணிமண்டபத்துக்கு வருகிறார். மணிமண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

பின்னர் மணிமண்டபத்தை திறந்து வைத்துப் பார்வையிடுவதோடு நினைவகத்திலிருந்து புதுதில்லி வரை செல்லவுள்ள அப்துல்கலாம்-2020 என்ற அவரது சாதனைப் பிரசார வாகனத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

காலை 11.55 மணிக்கு மணிமண்டபத்திலிருந்து புறப்பட்டு மண்டபத்தில் இந்திய கடலோரக்காவல்படையினரின் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு பிரதமர் செல்கிறார். விழா மேடையில் ராமேசுவரத்திலிருந்து அயோத்தி வரை செல்லும் புதிய ரயில் சேவையை அவர் தொடக்கி வைக்கிறார்.

தொடர்ந்து ராமேசுவரம் தீவுப்பகுதியில் தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல் முனை வரை ரூ.59 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கடற்கரைச் சாலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

விழா நிறைவு பெற்றதும் மீண்டும் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து, ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து தனி ராணுவ விமானத்தில் புதுதில்லி புறப்பட்டுச் செல்கிறார். இவ்விழாவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்."

No comments:

Post a Comment