கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, July 27, 2017

பி.இ படிப்பில் இனி அரியர் கிடையாது

"அரியர்' முறையை கைவிட்டது அண்ணா பல்கலைக்கழகம்: நடைமுறைக்கு வந்தது புதிய பாடத் திட்டம்

நிகழாண்டு முதல் 'அரியர்' முறையை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டுள்ளது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் 2 பாடங்களைக் கைவிட்டுவிட்டு எழுதவும், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 2 பாடங்களைக் கூடுதலாக சேர்த்து எழுதவும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பொறியியல் பாடத் திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியமைத்து வருகிறது. கடந்த 2013- இல் மாற்றியமைக்கப்பட்ட பாடத் திட்டம் மீண்டும் இந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பாடத் திட்டத்துக்கு பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இப்போது கலந்தாய்வு மூலம் பி.இ. முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு இந்த புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக கல்விக் குழுத் தலைவரும், கிண்டி பொறியியல் கல்லூரி டீனுமான கீதா கூறியது:

புதிய பாடத் திட்டத்தின்படி, பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு விருப்பப் பாடத் தேர்வு முறை (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் மாணவர்கள் படிக்க முடியும்.

'அரியர்' முறை ரத்து:

2017-18 கல்வியாண்டு முதல் 'அரியர்' முறை ரத்து செய்யப்படுகிறது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் இரண்டு பாடங்களைக் கைவிட்டுவிட்டுகஈ தேர்வுஎழுத முடியும். ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக அடுத்த பருவத் தேர்வின்போது எழுத அனுமதிக்கப்படமாட்டார்.

மாறாக, அவர் தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்தப் பருவத் தேர்வில் வருகிறதோ, அப்போதுதான் அவர் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அடுத்த பருவத்தேர்வுக்கான 2 பாடங்களை முந்தைய தேர்வின்போதே கூடுதலாக சேர்த்து எழுத அனுமதிக்கப்படுவார்கள். படிப்பின்போது சிறப்பு புராஜெக்ட் செய்ய விரும்பும் மாணவர், அவருடைய 8-ஆம் பருவத்துக்கான பாடங்களில், 2 பாடங்களை 6-ஆம் பருவத் தேர்விலும், மற்ற 2 பாடங்களை 7-ஆவது பருவத் தேர்விலும் சேர்த்து எழுத முடியும். இதன் மூலம், 8-ஆம் பருவக் காலத்தில் அந்த மாணவர் தனது சிறப்பு புராஜெக்ட் பணியைச் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவார்.

இவர்கள் 7.50 சிஜிபிஏ வைத்திருக்கவேண்டும்.

படிப்புக்கு இடையே பணி வாய்ப்பு:

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர், படிப்புக்கு இடையே (3 ஆம் ஆண்டுக்குப் பிறகு) ஓராண்டு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலைபார்க்க அனுமதிக்கப்படுவார்.

ஓராண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் கல்லூரிக்கு வந்து படிப்பை முடித்துக்கொள்ள முடியும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர் 'அரியர்' இல்லாமலும், முழு வருகையையும் வைத்திருக்கவேண்டும் என்பதோடு, ஒட்டுமொத்த கிரேடு மதிப்பெண் (சிஜிபிஏ) 8.50 என்ற அளவுக்கு குறைவில்லாமல் வைத்திருப்பது கட்டாயம்.

சி.பி.சி.எஸ். அறிமுகம் மற்றும் 'அரியர்' முறை ரத்து காரணமாக, பி.இ. சேரும் மாணவர் அதிகபட்சம் 7 ஆண்டுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதிகபட்சம் 5 ஆண்டுகளில் தேர்வுகளில் தோல்வியடையாமல், அனைத்துப் பாடங்களையும் முதல் முயற்சியிலேயே அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் மாணவருக்கு முதல் வகுப்புத் தகுதியுடன், சிறப்பிடமிடமும் (டிஸ்டிங்ஷன்) வழங்கப்படும்.

அதிகபட்சம் 6 ஆண்டுகளில் அனைத்துப் பாடங்களையும் முதல் முயற்சியிலேயே, அதிக மதிப்பெண்ணுடன் முடிக்கும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு வழங்கப்படும்.

மதிப்பிடும் முறையில் மாற்றம்

மதிப்பிடும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி 100 முதல் 91 மதிப்பெண் வரை பெற்றால் 'ஓ' கிரேடு (10 புள்ளிகள்) வழங்கப்படும். 90 முதல் 81 மதிப்பெண் வரை 'ஏ-பிளஸ்' (9 புள்ளிகள்). 80 முதல் 71 மதிப்பெண் வரை 'ஏ கிரேடு' (8 புள்ளிகள்). 70 முதல் 61 மதிப்பெண் வரை 'பி-பிளஸ்' (7 புள்ளிகள்). 60 முதல் 50 மதிப்பெண் வரை ''பி கிரேடு' (6 புள்ளிகள்). 50-க்கும் குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் மீண்டும் தேர்வு எழுதியாகவேண்டும்.

ஆன்-லைன் படிப்பு:

புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் ஆன்-லைன் பாட முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் ஒரு துணைப் பாடத்துக்குப் பதிலாக (எலெக்டிவ்), ஒரு ஆன்-லைன் பாடத்தை படிக்க முடியும். இதற்கான தேர்வை பல்கலைக்கழகமே நடத்தும். கல்லூரிகள் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது.

பைத்தான் அறிமுகம்

இப்போது முதல் பருவப் பாடத்தில் இடம் பெற்றிருக்கும் 'சி', 'சி பிளஸ்'' பிளஸ்' புரோகிராம்கள் கைவிடப்பட்டு புதிதாக 'பைத்தான்' அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொழில் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்போது பொறியியல் சேரும் மாணவர்கள் முதல் ஆண்டில் சி, சி பிளஸ் பிளஸ் படிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது."

No comments:

Post a Comment