ஓட்டுநர் உரிமத்துக்கு முகவரி, வயது சான்றாக ஆதார் ஏற்கப்படும்: மத்திய அரசு
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முகவரி மற்றும் வயதுச் சான்றாக ஆதார் ஏற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில், சட்ட அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக அளிக்கப்படும் சான்றுகளின் பட்டியலில் ஆதாரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது மற்றும் முகவரிச் சான்றாக ஆதார் ஏற்கப்படும். அதே நேரத்தில் விண்ணப்பதாரரிடம் ஆதார் இல்லாத பட்சத்தில் பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) காப்பீட்டு ஆவணம் ஆகியவையும் ஆதாரச் சான்றாக ஏற்கப்படும் என்றார்.
தொடர்ந்து, ஆதார் தகவல் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள சந்தேகம் குறித்து பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், "ஆதார் தகவல் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிலளித்துள்ளது. ஆதார் தகவலைப் பாதுகாக்க உரிய தொழில்நுட்பமும், சட்டமும் நம்மிடம் உள்ளது' என்றார் அவர்.
No comments:
Post a Comment