10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மைய திறப்பு விழா இன்று நடந்தது. இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றம் இல்லை.
புதிய பாட திட்டத்தில் 185 நாட்கள் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். 1, 6, 9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாட திட்டங்கள் மூலமாக தமிழக கல்வித் துறையை இந்தியாவே திரும்பி பார்க்கும்.
ஜூன் மாதத்தில் 4 வகை சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னதாகவே வெளியிட தயார் நிலையில் தேர்வு முடிவுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையே’’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ‘‘அங்கு முழுமையாக தெலுங்கு பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆகையால் அங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெலுங்கு தெரிந்த, பேசும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment