ஆதாரில் முக அடையாள முறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது
ஆதாரில் இப்போது கைவிரல் ரேகைகள், கண் கருவிழிப் படலம் முக்கிய அடையாளமாகப் பயன்படுத்துவதுபோல, ஆகஸ்ட் 1 முதல் முகத்தையும் அடையாளமாக ஏற்கும் முறை அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யூஐடிஏஐ) தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே இதனை தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக ஜூலை 1-ஆம் தேதி முதல் முக அடையாள முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது, அத்திட்டத்தை எவ்வித சிக்கலும் இன்றி அமல்படுத்துவதற்கு வசதியாக கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வயது முதிர்வு, கடின உழைப்பு, கை ரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால் சிலருக்கு ஆதார் அட்டை வழங்கும்போதும், பிற பயன்பாட்டின்போதும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி ஒருவரது முகமும், கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக ஆதார் எண்ணுக்கான அடையாளமாக பயன்படுத்தப்படும். எனினும், தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அடையாளம் எடுக்கப்படும். மற்றபடி சாதாரண நடைமுறையே தொடரும்.
முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது தனிநபர்களுக்கு ஏற்கெனவே உள்ள வழிமுறைகளோடு அடையாள உறுதிப்படுத்துதலுக்கு கூடுதலாக ஒரு வழிமுறையை வழங்குகிறது. அதேவேளையில், முகப்பதிவு அடையாள வழிமுறையை கருவிழிப் படலம், கைரேகை அல்லது ஒருமுறை கடவு எண் (ஓடிபி) ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைந்தே மேற்கொள்ள முடியும்.
இந்தப் புதிய சேவைக்காக, பயோமெட்ரிக் சாதனத்தை வழங்கும் நிறுவனங்களுடன் தனித்துவ அடையாள ஆணையம் இணைந்து செயல்பட்டுள்ளது. தற்போது வரை 121.17 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரியாக 4 கோடி ஆதார் அடையாள சரிபார்ப்புகள் நடைபெறுகின்றன என்ற தகவல் மூலம் ஆதார் பயன்பாட்டின் வீச்சை மதிப்பிடலாம்.
பல்வேறு அரசு உதவித் தொகை, மானிய விலை சமையல் எரிவாயு, விவசாயக் கடன்கள், ஓய்வூதியத் திட்டங்கள் என அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அவசியமாகி வருகிறது. இது தவிர வங்கிக் கணக்கு, செல்லிடப் பேசி எண், பான் கார்டு ஆகியவற்றுடனும் ஆதாரை இணைக்க வேண்டிய நிலை உள்ளது.
No comments:
Post a Comment