அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் போது, மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 6 சதவீதம் உயர்த்தப்பட்டது.இதனால், அகவிலைப்படியின் அளவு 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்தது.
தமிழக அரசு ஊழியர்கள்: மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார்.
உத்தரவு விபரம்
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
பலன் அடைவோர்
அகவிலைப்படி உயர்வினால் அரசு அலுவலர்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 620 வரையில் மாத ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.183 முதல் ரூ.2 ஆயிரத்து 310வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.இந்த உயர்வால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதியன்று, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், அகவிலைப்படியானது 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதிகரித்தது. இந்த நிலையில், மீண்டும் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment