பள்ளிகள் வழக்கம் போல் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குனர் தகவல்
பள்ளிகள் வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
கோடை விடுமுறை
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 55 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
ஏப்ரல் மாதம் இறுதிவரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
விடுமுறைக்கு பின்னர்
ஜூன் 1-ந் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.
சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் சுட்டெரித்த அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தது. தென்மாவட்டங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவந்தாலும், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
எனவே தொடர்ந்து கொளுத்தும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பதை மேலும் சில நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1-ந் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள், வெயில் காரணமாக ஜூன் 6-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? என்று பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,
தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினர்.
ஜூன் 1-ந்தேதி பள்ளி திறப்புஇதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், ஜூன் 1-ந் தேதி அன்று பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், விலையில்லா சீருடைகள் மற்றும் இதர மாணவர்கள் நலத்திட்ட பொருட்களும் வழங்குவதற்கு தேவையான ஆயத்தப்பணிகளும், தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
தூய்மையாக வைத்திருங்கள்
பள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு தூய்மை மற்றும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பள்ளி வளாகம், குறிப்பாக வகுப்பறைகளை சுத்தம் செய்திட வேண்டும். வகுப்பறைகளிலும், வகுப்பறை சுற்றிலும் ‘பிளீச்சிங்’ பவுடர் தூவி தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை மேற்பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்கி கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment