நிகழாண்டில் நாடு முழுவதும் சீரான முறையில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு வகை செய்யும் "தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு' (என்இஇடி) கட்டாயம்' என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் சங்கம், அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் சங்கம், சிக்கிம், கோவா உள்ளிட்ட மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே. கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மத்திய அரசு வழக்கு:
நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வகை செய்யும் சீரான நுழைவுத் தேர்வை "தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு' (என்இஇடி) என்ற பெயரில் நடத்துவதற்கான அறிவிக்கையை இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை 2010, டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்டது.
அதை எதிர்த்து வேலூர் சிஎம்சி கல்லூரி தொடுத்த வழக்கில் என்இஇடி முறைக்கு வகை செய்யும் அறிவிக்கையை உச்ச நீதிமன்றம் 2013, ஜூலை 18-இல் ரத்து செய்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை மனு தாக்கல் செய்தன.
அதை விசாரித்து, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 28-இல் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, 2016-17 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏதுவாக என்இஇடி நடத்தத் தயார் என்று இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), மத்திய அரசு ஆகியவை தெரிவித்தன. இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில், மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை அந்த மாநில அரசே நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த மாநிலத்தில் அமலில் உள்ள சட்டப்படி 50 சதவீத இடங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 2ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அந்த வழக்கின் தீர்ப்பில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வகை செய்யும் தேர்வை அரசு நடத்துவது தனியார் கல்லூரிகளின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறிய வாதத்தை அரசியல் சாசன அமர்வு நிராகரித்தது. தரமான கல்வி, அதை உறுதிப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம் ஆகிய இரு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை அரசு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியது. முகாந்திரம் இல்லை: அந்த தீர்ப்பின் அடிப்படையில், தேசிய அளவில் தகுதி, நுழைவுத் தேர்வை ஒழுங்குமுறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை மாநில அரசுகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமை, சிறுபான்மையினரின் உரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றைப் பாதிக்கும் என்று கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை மட்டுமே என்இஇடி முறை உறுதிப்படுத்துகிறது.
அந்த அடிப்படையில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய மனுதாரர்கள் விடுக்கும் கோரிக்கையில் முகாந்திரம் இல்லை.
மாணவர்களுக்கு வாய்ப்பு:
இந்தத் தேர்வு முறையால் முதலாம் கட்ட என்இஇடி எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அகில இந்திய அளவில் 15 சதவீத ஒதுக்கீடுக்கு மட்டுமே வகை செய்யும் அந்தத் தேர்வை எழுத மாணவர்கள் சரியாகத் தயாராகியிருக்க மாட்டார்கள் அல்லது இரண்டாம் கட்டத் தேர்வெழுத தங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் போன்ற எண்ணத்துடன் மாணவர்கள் முதல்கட்டத் தேர்வை எழுதியிருக்கலாம் என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இது தொடர்பாக எழும் அச்சத்தைக் களையும் வகையில், முதலாம் கட்டத் தேர்வு எழுதிய மாணவர்கள் இரண்டாம் கட்ட என்இஇடி எழுத நிபந்தனையுடன் அனுமதிக்கலாம். இதன்படி, இரண்டாம் கட்ட தேர்வெழுதும் மாணவர்கள், முதலாம் கட்ட தேர்வு முடிவின் வாய்ப்பை பின்னர் பயன்படுத்த முடியாது. தேவைப்பட்டால் இரண்டாம் கட்ட என்இஇடி தேதியை தள்ளிவைத்துக் கொள்ளும் உரிமை எதிர் மனுதாரருக்கு (மத்திய அரசு) வழங்கப்படுகிறது. இந்த அளவுக்கு மட்டும் ஏப்ரல் 28-இல் பிறப்பித்த உத்தரவில் சிறிது மாற்றம் செய்யப்படுகிறது.
மனுக்கள் தள்ளுபடி:
சிபிஎஸ்இ நடத்தும் முதலாம் கட்ட என்இஇடி முறையை கண்காணிக்க ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவே இரண்டாம் கட்ட என்இஇடி முறையைக் கண்காணிக்கும். மேற்கண்ட உத்தரவின் மூலம், என்இஇடி எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இனி மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர முடியும் என்பதை மீண்டும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது. இந்த விவகாரத்தில் அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் சங்கம், சிக்கிம், நாகாலாந்து, கோவா உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கும் பொருந்தும்
உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டு வரை அமலில் இருந்து வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு (கவுன்சிலிங்) முறை முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, என்இஇடி எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment